மேகலா - இளைப்பாறு இளவரசியே !

இளைப்பாறு இளவரசியே !

மேகலா ..

எனதன்புத் தங்கை, நல்லாள்,
அன்பு உள்ளத்தாள், பரோபகாரி
இவை அனைத்தையும் தாண்டி
இல்லாள், அன்புள்ள அம்மா !!!

*

இத்துணை முகங்களேந்திய
பாரத்தை இறக்கி வைக்க
இறைவன் வகுத்த
இரகசியத் திட்டமா இது
இத்துணை வேகமாய் உன்னை
இளைப்பாற வைத்தான்
இரவோடு இரவாக?

*

உன்னை அழைத்துக் கொண்ட
பரவசம் அவனுக்கு ! உன்னைப் பறிகொடுத்த
பதற்றமும் பரிதவிப்பும்
மட்டும் எங்களுக்கு!

*

அவசரம் மட்டுமே
தாராளமாய்த் ததும்பி வழியும்
தற்கால உலகில் ஒரு
தனி மனுஷி இத்துணை
தன்மையாய், இயல்பான
மென்மையாய் பல நூறு (ஆயிரம்)
இதயங்களைக் கவர்ந்ததின்
பரிணாம விளைவு - உனக்காய்
அழுது ஓய்ந்த கண்களும்,
அதிர்ச்சியில் உறைந்த நெஞ்சங்களும்,
அக்கறையாய் விசாரித்துத் தட்டச்சிய விரல்களும் ,
அலைபேசியில் வந்த
அடைமழையான அழைப்புக்களும் !!

*

அழுகுரல்களின் தழுதழுப்பில்
அலைபேசியும் அரண்டு விட்டதம்மா !!

*

எல்லாம் சரி, உனக்கான
ஆசீர்வாதங்களும் வாழ்த்துக்களும்
உவகையாய் ஊற்று எடுத்ததில்
ஆச்சரியம் அதிகம் இல்லை !

*

உன்னை இழந்ததால்
உலகமே இடிந்த
உணர்வில் உருக்குலைந்த
உனது கணவருக்கும்,
மகவுக்கும் (மகளுக்கும்),
ஆறுதல் சொல்லித் தேற்ற
ஆளில்லை இங்கே என்பதை அந்த
ஆண்டவனுக்கு யார் நினைவூட்டுவது?

*

உயிர்க்கொல்லி நோயின்
உக்கிரத்தில்
உற்றார் உறவினர்கள்
உயிரிழந்த வேதனையில், அழுதழுது
உறைந்த போன
உடம்பின் பாகங்கள் சற்றே
உறங்கியது பிடிக்கவில்லையா அந்த
உலகளந்த பெருமானுக்கு ?

*

நீ காட்டிய அக்கறை,
நீலவானம் நீண்டிருக்கும் வரை
நித்தியமாய் நிலைத்திருக்கும் !
உன்னால் உத்வேகம் பெற்ற
எத்தனையோ உள்ளங்கள்
உன்னை என்றும் வாழ்த்தி
மகிழ்ந்திருக்கும் !

*

ஏதேதோ காரணங்களினால்
ஓரிரு வருடங்கள்
இளைப்பாறிய என் தூரிகை உனக்கான
இரங்கற்பா எழுத வேண்டித்
துயில் உரித்தது அதன்
துர்பாக்கியம் !!!

*

இவ்வளவுக்குப் பின்னும்
இதனை இன்னுமொரு
இரங்கற்பா என்றளவில் விட்டு விட
இணங்கவில்லை என் நெஞ்சம் !!!
ஆனதெல்லாம் ஆகட்டும் நீ
இன்றாவது இளைப்பாறு கொஞ்சம் !!

*

போய் வா தங்கையே என்ற
போதா வார்த்தைக்கு மட்டும்
பொருத்தமுள்ள சொந்தக்காரனாய்
உன்னை இழந்ததால்
வருந்தி, வாடி நிற்கும்
உனது அன்பு அண்ணன்.

இராகவன் என்ற சரவணன் முத்து.
19 ஜனவரி 2023 வியாழன் இரவு 10 மணி இந்திய நேரப்படி !