யார் இந்த பிள்ளை?

முச்சந்தி என்றால் இந்த பிள்ளையுண்டு !

அரச மரம் என்றால் இந்த பிள்ளையுண்டு !

ஆத்தங்கரை என்றால் இந்த பிள்ளையுண்டு !

குளத்தங்கரை என்றால் இந்த பிள்ளையுண்டு !

மஞ்சள் பொடி என்றால் இந்த பிள்ளையுண்டு !

களிமண் என்றால் இந்த பிள்ளையுண்டு !

கண் திருஷ்டி என்றால் இந்த பிள்ளையுண்டு !

கருப்பு எரும்பு என்றால் இந்த பிள்ளையுண்டு !

கன்னி மூலை என்றால் இந்த பிள்ளையுண்டு !

அருகம்புல் என்றால் இந்த பிள்ளைக்குண்டு !

எருக்கம்பூ என்றால் இந்த பிள்ளைக்குண்டு !

தேங்காய் என்றால் இந்த பிள்ளைக்குண்டு !

மாம்பழம் என்றால் இந்த பிள்ளைக்குண்டு !

கொழுக்கட்டை என்றால் இந்த பிள்ளைக்குண்டு !

சுண்டல் என்றால் இந்த பிள்ளைக்குண்டு !

அப்பம் என்றால் இந்த பிள்ளைக்குண்டு !

கரும்பு என்றால் இந்த பிள்ளைக்குண்டு !

மஹாபாரதம் என்றால் இந்த பிள்ளையுண்டு !

யானை என்றால் இந்த பிள்ளையுண்டு !

சதுர்த்தி என்றால் இந்த பிள்ளையுண்டு !

குடை என்றால் இந்த பிள்ளைக்குண்டு !

மூஞ்சூறு என்றால் இந்த பிள்ளையுண்டு !

பசுஞ்சாணம் என்றால் இந்த பிள்ளையுண்டு !

வெள்ளெருக்கு என்றால் இந்த பிள்ளையுண்டு !

சுழி என்றால் இந்த பிள்ளையுண்டு !

யாரோ !?! இந்த பிள்ளை யாரோ !?!

இவரே பிள்ளையாரோ !!!

சங்கடங்கள் நீக்க சதுர்த்தியில் வந்த பிள்ளையே !!!

சிவனையும் எதிர்த்து, தாய் சொல்லைக் காக்க வந்த பிள்ளையே !!!

அம்மையப்பனே உலகம் என எல்லோருக்கும் சொல்ல வந்த பிள்ளையே !

எல்லோருக்கும் பிள்ளையே !!! சமத்துப்பிள்ளையே !!! கொழுக்கு மொழுக்கு பிள்ளையே !!! கொழுக்கட்டை பிள்ளையே !!!

ஊரும் உலகமும் கொண்டாடும் பிள்ளையே !!!

தொந்திப்பிள்ளையே !!! தந்தப்பிள்ளையே ! பிள்ளைகள் கொண்டாடும் பிள்ளையே !!!

வா ! வா ! உனக்காகவே நாங்கள் ஆசை ஆசையாய் காத்திருக்கிறோம் !

அப்பம், பழம், கரும்பு… கூடவே எங்கள் அன்பும்… உனக்காகவே….

அனைத்து உறவுகளுக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்…!!!

கஜமுக பாத நமஸ்தே !

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் !

விநாயகருக்கு அவல் படைப்பதன் நோக்கம் !

அவலை அரிசியிலிருந்து தயாரிக்கிறோம். அது உரலில் அங்கும் இங்குமாக புரண்டு மிகக்கடுமையாய் இடிபடும். எந்த அளவுக்கு இடிபடுகிறதோ அந்த அளவுக்கு சுவையான அவல் கிடைக்கிறது. அரிசி உரலுக்குள் இடிபடுவதுபோல, மனிதனாகப் பிறந்தவனும் பசி, பட்டினி, வறுமை, நோய் நொடி என வாழ்க்கைச் சூழலில் சிக்கி இடிபட்டுத்தான் ஆகவேண்டும். அதற்காக இறைவன் மீது வருத்தப் படக்கூடாது. இந்த துன்பங்களுக்கு காரணம் அவரவர் வினைகளே. வகுப்பறையிலுள்ள உங்கள் பெஞ்சில் செல்லும் எறும்பை நீங்கள் நசுக்கக்கூ டாது. கடிக்க வந்தாலும் தூர தள்ளி விட்டால் போதும். மீறி அடித்தால் அடுத்த பிறவி யில் இதே துன்பத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டி வரும். எனவே துன்பங்களுக்கு காரணம் அவரவர் செய்த பாவங்களே என்று குறிப்பிடுவதே அவல் படைப்பதின் தத்துவமாகும்.

விநாயகருக்கு பொரி படைப்பதன் நோக்கம் !

மீண்டும் பிறவி எடுக்கக்கூடாது என்பதற்காகத் தான். நெல்லை நிலத்தில் போட்டால் முளைக்கும். அதையே வறுத்து பொரியாக்கி நிலத்தில் போட்டால் விளையாது. நீ நெல் போல இருக்காதே; பொரியாக மாறிவிடு. பொரிக்கு எப்படி வளரும் சக்தி கிடையாதோ அதுபோல் மறுபிறவி என்ற சொல்லையே மறந்துவிட்டு இறைவனுடன் ஐக்கியமாகிவிடு, என்பதே இதன் பொருள்.

விநாயகருக்கு கனி படைப்பதின் காரணம்

மனிதா! நீ இறைவனால் படைக்கப்பட்டவன். என்றேனும் ஒருநாள் அந்த இறைவனை அடைந்து தான் ஆக வேண்டும். அதற்குரிய முன்னேற்பாட் டை நீ செய்துகொள். பொருள்தேடி அலைவதிலோ, 24 மணி நேரமும் உழைப்பதிலோ எந்த தவறும் கிடையாது. ஆனால், அந்த உழைப்பின் பலனை நீ என்ன செய்திருக்கிறாய் என்று எண்ணிப்பார்.

உனது மனைவி, குழந்தைகள் அனைவருக்கும் அந்த சொத்துக்களை எழுதி வைத்திருக்கலாம். இது உன் குடும்பத்திற்கு மட்டுமே ஆகும். ஆனால், இந்த உலகத்திற்காக நீ ஏதாவது செய்ய வேண்டுமென இறைவன் எதிர்பார்க்கிறான். குறைந்தபட்சம் ஒரு அன்னதானமாவது செய்தாயா என யோசித்துப் பார். அப்படி செய்யாமல் இருந்தால் அதை இன்றே செய்துவிடு. ஏனெனில் நீயும் ஒருநாள் எனக்கு படைக்கப்பட்ட கனி போல பழுத்துவிடுவாய். பழுத்தகனி மரத்திலிருந்து உதிர்ந்துவிடும்.

அதாவது, உன் வாழ்க்கை அழிந்துபோகும். அதற்கு முன்னதாக நீ காய் பருவத்திலேயே (வாழும்போதே) நல்லதைச் செய்துவிடு, என்பதைக் குறிப்பால் காட்டுவதற்கு ஆகும்.

சிதறுகாய் உடைப்பதன் காரணம் !

எந்த சுப காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் விநாயகரை வேண்டி அவருக்கு ஒரு சிதறுகாய் உடைத்து தான் ஆரம்பிப்பார்கள். இது தொன்றுதொட்டு நடைபெற்று வரும் பழக்க வழக்கங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஒரு முறை, விநாயகர் யாகம் ஒன்றை மேற்கொள்வதற்காக கையில் தேங்காய்களுடன் யாக கூடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வழியில் அசுரன் ஒருவன் குறுக்கிட்டு தடை ஏற்படுத்தினான். அந்த அசுரனை அழிக்க விநாயகர், தான் கையில் வைத்திருந்த தேங்காய்களை அசுரனை நோக்கி எறிந்தார். தேங்காய்கள் கல்லில் பட்டு சிதறுவதைப் போல, அசுரனும் பொடிப் பொடியாகிப்போனான். இதையடுத்து விநாயகருக்கு ஏற்பட்ட தடை அகன்றது. அதன் காரணமாகத்தான் எந்த காரியத்தை தொடங்கும் முன்பும், அதற்கு தடை ஏற்படாமல் இருக்க சிதறுகாய் உடைக்கப்படுகிறது.

கஜமுக பாத நமஸ்தே !

Cheers,
RM…
Raghavan alias Saravanan Muthu
09 Sep 2021 | Thu | 16:56:16 PM IST