கணவன் மனைவி ஒற்றுமையை அதிகரிக்கும் கார்த்திகை சோமவாரம் விரதம்

இன்று கணவன் மனைவி ஒற்றுமையை அதிகரிக்கும் கார்த்திகை சோமவாரம் விரதம் !

இன்று நவம்பர் 21-11-2022, சுபகிருது வருடம், கார்த்திகை 05, திங்கட்கிழமை!

இன்றைய சிறப்பு : கார்த்திகை முதல் சோமவாரம், பிரதோஷம், கரிநாள்

இன்றைய வழிபாடு : சிவன் கோயில்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு சிவபெருமானுக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுதல், சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் தரிசித்தல்.

கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமவார விரதம் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தைக் கடைபிடித்தான். அதனால் அவன் சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம் பெறும் பேறு பெற்றான்.

Meenakshi Sundreswarar

சோமவார விரதம் இருந்தால்

  • குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.
  • கணவன் மனைவி இடையே சந்தோஷம் கூடும்.
  • பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.

கார்த்திகை மாதத்தின் முதல் திங்கட்கிழமையான இன்றைய தினம் பெண்கள் அதிகாலையிலேயே நீராடி விரதத்தை தொடங்கினர். இன்றைய தினம் அனைத்து சிவ ஆலயங்களிலும் சங்காபிஷேகம் நடைபெறுவது சிறப்பு. சிவபெருமானுக்கு ஸ்ரீசோமநாதர் எனும் திருநாமமும் உண்டு. திங்கள் என்றால் சந்திரன். சிவனாரின் தலை யில் சந்திரனையும் கங்கையையும் சூடியிருப்பார்.

கார்த்திகை சோமவார விரதத்தின் சிறப்பைச் சிவபெருமானே பார்வதி தேவிக்குச் சொல்லி இருக்கிறார். இந்த விரதத்தைப் போன்று வேறு எந்த விரதத்திலும் சிவபெருமான் திருப்தி அடைய மாட்டார் என்பது ஐதீகம்.

சோமவார விரத பலன்

சோமவார விரதம் இருப்பவர்கள் சிவபக்தியுடன் 16 சோமவார விரதம் இருப்பது அவசியம். 16 சோமவாரம் விரதங்கள் முடிந்தபின் மறுநாள் காலையில் 16 லட்டுகள் செய்து கோயிலுக்கு கொண்டு போய் நைவேத்தியம் செய்து அங்குள்ளவர்களுக்கும் கொடுத்து தானும் சாப்பிட்டு விட்டு ஒரு லட்டை பசு மாட்டிற்குக் கொடுத்து மீதியை வீட்டிற்குக் கொண்டு வந்து பெரியவர்களுக்கும் கொடுத்து விளக்கு வைக்கும் நேரம்வரை பூஜை செய்த லட்டை வைத்துக் கொள்ளாமல் எல்லோருக்கும் கொடுத்து விட வேண்டும்.

விரத நாளில் யாரிடமும் கோபமாக பேசக்கூடாது. முடிந்த வரை மவுன விரதம் இருப்பது நல்லது. சோமவார விரதம் இருப்போருக்கு அவரவர் வேண்டும் பலனை நிச்சயம் சிவபெருமானே தருவார் என்பது உறுதி. கார்த்திகை மாத சோமவார விரதம் இருப்பவர்கள் சிவ ஆலயம் சென்று அங்கு நடைபெறும் சங்காபிஷேகத்தை தரிசிக்க வேண்டும். இதன் மூலம் பலன்கள் அதிகரிக்கும்.

சிவாய நம ☘️ திருச்சிற்றம்பலம் ☘️ 🙆🙇🙏

Cheers,
RM…
Raghavan alias Saravanan Muthu
21 Nov 2022 | Mon | 08:07:15 AM IST