மஹாளய பித்ருபக்ஷம் 21.09.2021 முதல் 06.10.2021 வரை…

மற்ற அமாவாசைகளை விட மஹாளய அமாவாசை முக்கியத்துவம் பெறுவது ஏன்?

புரட்டாசியில் வரும் அமாவாசை நாள் மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. புரட்டாசி அமாவாசைக்கு முன்னர் வரும் 15நாட்களை மஹாளய பட்சம் என்று சொல்வார்கள். இறந்தவர்களின் ஆன்மாக்கள் பித்ரு லோகத்தில் இருந்து தர்மராஜனின் அனுமதியோடு பூலோகத்திற்கு வந்து தனது சந்ததியினரையும், தெரிந்தவர்களையும் காண வரும் காலமே இந்த மஹாளய பட்சம் என்று சொல்லப்படுகிறது. இந்த 15 நாட்களும் சுபநிகழ்வுகளைத் தவிர்த்து முன்னோர்களின் நினைவாக அவர்களுக்குரிய சிராத்தம், தர்ப்பணம் ஆகியவற்றைச் செய்வதால் அவர்களது ஆன்மாக்கள் சாந்தி பெறும் என்பது நம்பிக்கை.

15 நாட்களும் செய்ய இயலவில்லை என்றாலும், அமாவாசை நாளில் மட்டுமாவது முன்னோர்களின் நினைவாக விரதம் இருந்து தர்ப்பணம் செய்வதோடு ஏழை, எளியோர், ஆதரவற்ற முதியோர்க்கு அன்னதானம் செய்வதால் புண்ணியம் கிட்டும். இதற்கும் மகாபாரதக் கதை ஒன்று ஆதாரமாகச் சொல்லப்படுகிறது. தான தர்மங்களில் தன்னிகரற்று விளங்கிய கர்ணன் இறந்த பிறகு சொர்க்கலோகம் சென்றானாம். அங்கே அவன் செய்த தான தர்மங்களின் பலனாக தங்கமும், வெள்ளியும், இதர ரத்தினங்களும் மலை மலையாகக் கிடைத்தனவாம். ஆனால், அவனுக்கு சாப்பிடுவதற்கு உணவு மட்டும் கிடைக்கவில்லை.

காரணம் இதுதான் அவன் எத்தனையோ தான தருமங்கள் செய்திருந்த போதிலும் தான் வாழ்ந்த காலத்தில் அன்னதானம் மட்டும் செய்திருக்கவில்லை. தன் தவறை உணர்ந்த கர்ணன் தர்மராஜனின் அனுமதி பெற்று பூலோகத்திற்கு திரும்ப வந்து 14 நாட்கள் ஏழை, எளியோர்க்கும், முதியோர்க்கும் அன்னதானம் செய்ததோடு தனது முன்னோர்களுக்கு உரிய கடன்களை எள்ளும் தண்ணீரும் இறைத்து பூர்த்தி செய்து மீண்டும் சொர்க்கம் திரும்பியதாக மகாபாரதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த 14நாட்களுடன் இறுதி நாளான அமாவாசையையும் சேர்த்து மொத்தம் 15 நாட்களும் மஹாளய பட்சம் என்று அழைக்கப்படுகிறது.

‘மறந்தவனுக்கு மாளயத்தில் கொடு’ என்ற பேச்சுவழக்கினைக் கேட்டிருப்போம். மஹாளய அமாவாசை நாளில் இறந்துபோன நம் பெற்றோர்கள் மட்டுமல்லாது, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, மாமன், மாமி, சகோதரன், சகோதரி, ஆசிரியர், சிஷ்யன், நண்பன் என நாம் அறிந்தவர்களில் இறந்துபோன எல்லோரையும் திரும்ப நினைவிற்குக் கொண்டுவந்து அவர்களுக்கும் எள்ளுடன் கலந்த தண்ணீரை வார்த்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.

பிரதி மாதம் வருகின்ற அமாவாசை என்பது சூரிய, சந்திரனின் சேர்க்கையைக் குறிக்கும். பிதுர்காரகன் சூரியனும், மாதுர்காரகன் சந்திரனும் விஷ்ணு லோகம் என்று கருதப்படும் கன்னி ராசியில் ஒன்றிணையும்போது வரும் அமாவாசையே மஹாளய அமாவாசை. பிற மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் முன்னோரை வணங்க மறந்தவர்களும், சந்தர்ப்பம் சரியாக அமையாதவர்களும் கூட இந்தப் புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு செய்ய, பிதுர்தோஷம் முற்றிலுமாக நீங்கி புண்ணியம் அடைவர். ஜாதகத்தில் பிதுர்தோஷம் உள்ளது என்று ஜோதிடர்களின் மூலம் தெரிந்து கொண்டவர்கள் மஹாளய அமாவாசை நாளில் அன்னதானம் செய்ய, தோஷம் நீங்கி நலம் பெறுவார்கள்.

சிவாயநம

வாழ்க வளமுடன்.

Cheers,
RM…
Raghavan alias Saravanan Muthu
18 Sep 2021 | Sat | 10:37:21 AM IST