ராகு கேது பெயர்ச்சி 2023 - 12 ராசிக்கும் சுருக்கமான பலன்கள்

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - 8.10.23 முதல் 26.4.25 வரை

நிகழும் சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தட்சிணாயனப் புண்ணிய கால, வருஷ ருதுவில் கிருஷ்ணபட்சத்து தசமி திதி, பூசம் நட்சத்திரம், சித்தம் நாமயோகம், வணிசை நாமகரணம் சித்த யோகத்தில், பஞ்சபட்சியில் ஆந்தை நடைபயிலும் நேரத்தில் 8.10.23 பிற்பகல் 3 மணி 36 நிமிடத்துக்கு மேஷ ராசியிலிருந்து மீனம் ராசிக்குள்

ராகு பகவானும், துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் கேது பகவானும் நுழைகின்றனர்.

8.10.23 முதல் 26.4.25 வரை ராகு பகவான் மீனத்திலும், கேது பகவான் கன்னியிலும் இருந்து பலன் தருவார்கள்.

மேஷம்: கூடி வாழும் குணம் கொண்டவர்களே!

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்துகொண்டு பிரச்னைகளில் சிக்கவைத்த ராகு பகவான் இப்போது ராசிக்குப் பன்னிரண்டாம் வீட்டுக்கு வந்தமர்வதால் சங்கடங்கள் நீங்கும்; சந்தோஷம் பொங்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்கு ஏழாவது வீட்டில் இருந்துகொண்டு உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் இடையே சண்டையையும், உடல்நலக் குறைவையும் தந்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து அகற்றும் சக்தியைக் கொடுப்பார். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மரியாதை கூடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மாறுபட்ட முயற்சியால் வேலைகளை முடிப்பீர்கள். ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். இந்த ராகு-கேது பெயர்ச்சி பழைய பிரச்னைகளில் இருந்து விடுபட வைப்பதாகவும், ஆதாயத்தைத் தருவதாகவும் அமையும்.

ரிஷபம்: எதிலும் நடுநிலைத் தவறாதவர்களே!

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்குப் பன்னிரண்டில் அமர்ந்துகொண்டு பிரச்னை களையும் நெருக்கடிகளையும் தந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு லாப வீட்டுக்கு வருவதால் தன்னம்பிக்கையையும் பணவரவையும் கொடுப்பதுடன் வீண் செலவுகளையும் குறைப் பார். சவாலான காரியங்களையும் சர்வசாதாரணமாக இனி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். கணவர் உங்களை ஆதரித்துப் பேசுவார்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்திருந்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய வீடான ஐந்தாம் வீட்டுக்கு வந்து அமர்கிறார். பிள்ளைகள், உங்கள் பேச்சுக்கு கட்டுப்படுவார்கள். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் கடையை விரிவு படுத்துவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இருந்த மோதல் போக்கு, ஊழியர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். இந்த ராகு-கேது மாற்றம் புதிய தொடர்புகளையும், வசதி வாய்ப்பையும் அதிகப்படுத்துவதாக அமையும்.

மிதுனம்: இதயத்திலிருந்து பேசுபவர்களே!

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்கு 11-ம் வீட்டில் அமர்ந்து பொருள் வரவு, திடீர் லாபம் எனத் தந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்குப் பத்தாவது வீட்டில் வந்து அமர்கிறார். குடும்பத்தில் அமைதி தொடரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய கடனை அடைக்கும் அளவுக்குப் பணவரவு உண்டு.

கேதுவின் பலன்கள்

இதுவரையில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்து சொந்தங்களிடையே கருத்து மோதல் எனப் பல கசப்பான அனுபவங் களையும் தந்த கேது, இப்போது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் வந்தமர்வதால் பக்குவப்பட வைப்பார். கனிவான பேச்சாலேயே காரியங்களை சாதிப்பீர்கள். பிள்ளைகள், உங்களின் விருப்பங்களுக்குக் கட்டுப்படுவார்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்வது நல்லது. உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. வேலைச்சுமை அதிகரித்தாலும் புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்வீர்கள். இந்த ராகு-கேது பெயர்ச்சி அரைகுறையாக நின்ற அனைத்து வேலைகளையும், முழுமையாக முடிக்கும் திறனைத் தருவதாக அமையும்.

கடகம்: சுதந்திர மனப்பான்மை உள்ளவர்களே!

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்குப் பத்தாவது வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களை ஒரு வேலையையும் முழுமையாகப் பார்க்கவிடாமல் தடுத்த ராகு பகவான் இப்போது ஒன்பதாம் வீட்டில் வந்தமர்வதால் முடியாது என்றிருந்த பல காரியங்களை இனி முடித்துக்காட்டுவீர்கள். கணவன் மனைவிக்குள் பாசப்பிணைப்பு அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். உறவினர்கள் வியக்கும்படி உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.

கேதுவின் பலன்கள்*

இதுவரை உங்களின் ராசிக்கு நான்காவது வீட்டில் அமர்ந்து உங்களை நாலாவிதங்களிலும் அவஸ்தைப்படுத்திய கேது பகவான் இப்போது மூன்றாவது வீட்டிலே முகமலர்ந்து அமர்கிறார். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளைப் புது யுக்தியால் விற்றுத்தீர்ப்பீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் வெகுநாள் கனவான பதவி உயர்வு உண்டு. வேலைச்சுமை குறையும். இந்த ராகு-கேது பெயர்ச்சி நிம்மதியையும், செல்வ வளத்தையும் தருவதாக அமையும்.

சிம்மம்: முகத்துக்கு நேராகப் பேசுபவர்களே!

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்துகொண்டு கிடைக்கின்ற வாய்ப்புகளையெல்லாம் தட்டிவிட்டதுடன், கையில் ஒரு காசும் தங்கவிடாமல் துடைத்தெடுத்த ராகு பகவான் இப்போது எட்டில் சென்று மறைகிறார். தடைப்பட்ட காரியங்களெல்லாம் இனி ஒவ்வொன்றாக முடியும். கணவருடன் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலையைப் புரிந்து நடந்துகொள்வார்கள்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்ந்துகொண்டு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்து வந்த கேது பகவான் இப்போது ராசிக்கு இரண்டாவது வீட்டில் நுழைகிறார். சாதுரியமான பேச்சால் சாதிப்பீர்கள். வியாபாரத்தில் வர வேண்டிய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். வேலை யாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். சலுகைகளுடன் பதவியும் உயரும். இந்த ராகு-கேது பெயர்ச்சி உங்களைத் தனித்து நின்றே வெற்றிபெற வைக்கும் சக்தியையும் சகிப்புத் தன்மையையும் தருவதாக அமையும்.

கன்னி: சுமை சுமந்து வருபவர்களை சுமப்பவர்களே!

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்து நின்று காரியத் தடை களையும், மன உளைச்சல்களையும் கொடுத்து வந்த ராகு பகவான் இப்போது ராசிக்கு ஏழாம் வீட்டில் வந்து அமர்கிறார். உங்களுக்குள் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவார். வீண் விவாதங்கள், அலைச்சல்கள் குறையும். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. பிள்ளைகளுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கப் பாருங்கள்.

கேதுவின் பலன்கள்*

இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் நின்றுகொண்டு உங்களைப் பக்குவமில்லாமல் பேசவைத்த கேது பகவான் இப்போது உங்கள் ராசியிலேயே வந்து அமர்வதால் இனி சமயோஜிதமாகப் பேசி அசத்துவீர்கள். வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உங்கள் அணுகு முறையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்புக்கேற்றாற்போல பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். இந்த ராகு-கேது பெயர்ச்சி அதிரடியாக வளர்ச்சியடையச் செய்வதுடன் அனைத்திலும் முதலிடம் பிடிக்க வைப்பதாக அமையும்.

துலாம்: பரந்த மனசுக்குச் சொந்தக்காரர்களே!

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் நின்றுகொண்டு உங்களை திக்குதிசையறியாது திணற வைத்ததுடன், குடும்பத்தினரையும் உங்களையும் பிரித்து வைத்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் ஆற்றலுடன் வந்தமர்கிறார். உங்களை எதிரியைப்போல் பார்த்தவர்கள் இனி பாசத்துடன் நடந்துகொள்வார்கள். சந்தேகத்தால் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். எதிர்பார்த்த இடத் திலிருந்து பணவரவு உண்டு.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்து காரியத்தடைகள் தந்த கேது இப்போது பன்னிரண்டில் சென்று அமர்கிறார். இனி உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். பால்யகால தோழிகளுடன் சந்திப்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். பழைய தவறுகள் நிகழாதவண்ணம் பார்த்துக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் தொந்தரவு கொடுத்து வந்த பிரச்னைகள் தீரும். சக ஊழியர்களும் உங்களிடம் நட்புறவாடுவார்கள். இந்த ராகு-கேது மாற்றம் திடீர் யோகங்களையும், எதிர்பாராத வெற்றிகளையும் தருவதாக அமையும்.

விருச்சிகம்: எதிலும் புதுமையை விரும்புபவர்களே!

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு ஆறில் நின்ற ராகு ஒருபுறம் நல்லதைச் செய்து மறுபுறம் வீண் டென்ஷன், மன உளைச்சல், மறைமுக எதிர்ப்புகள் தந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். வருமானம் உயரும்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து விரயச் செலவுகளையும், வீண் அலைச்சலையும் தந்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு லாப வீடான பதினொன்றில் வந்தமர்கிறார். திடீர் யோகம், வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். தடைப்பட்ட சுப காரியங்கள் ஏற்பாடாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத்தீரும். வாடிக்கையாளரை அதிகப்படுத்தும் விதமாகக் கடையை விரிவுபடுத்தி நவீனமயமாக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தேங்கிக்கிடந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். இந்த ராகு-கேது மாற்றம் மறைந்துகிடந்த திறமைகளை வெளிக்கொணர்ந்து புகழையும் தரும்.

தனுசு: புன்சிரிப்பால் அனைவரையும் வசீகரிப்பவர்களே!

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து பாடாய் படுத்திய ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்வதால் இனி மன நிம்மதியைத் தருவார். கணவன் மனைவிக்குள் தாம்பத்தியம் இனிக்கும். உங்களுக்குள் கலகத்தை ஏற்படுத்தியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். பூர்வீகச் சொத்திலிருந்த பிரச்னைகளை சுமுகமாகப் பேசித் தீர்ப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்குப் பதினொன்றாவது வீட்டில் அமர்ந்து ஓரளவு நல்ல பலன்களைத் தந்த கேது பகவான் இப்போது பத்தாவது வீட்டில் வந்தமர்வதால் தொட்ட காரியத்தை விரைந்து முடிக்க வைப்பார். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் ஒருபுறமிருந்தாலும் தந்திரத்தால் லாபத்தைப் பெருக்குவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் யாராலும் செய்ய முடியாத கஷ்டமான வேலைகளையும் செய்து முடித்து சக ஊழியர்களையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். இந்த ராகு-கேது பெயர்ச்சி உங்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும்.

மகரம்: மனசாட்சிக்கு விரோதமில்லாதவர்களே!

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்கு நான்காம் இடத்தில் அமர்ந்து உங்களை பந்தாடிய ராகு பகவான் இப்போது ராசிக்கு மூன்றாம் வீட்டுக்கு வந்தமர்வதால் எதிலும் வெற்றி உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியங்களை இனி சிறப்பாக நடத்துவீர்கள். கடன் தொல்லைகள் தீரும். குடும்பத்தினர் உங்களின் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

கேதுவின் பலன்கள்

இதுவரையில் உங்கள் ராசிக்குப் பத்தாமிடத்தில் அமர்ந்து எந்த வேலையையும் முழுமையாகச் செய்ய விடாமல் தடுத்த கேது இப்போது ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்கிறார். குடும்பத்தில் நிலவி வந்த குழப்ப நிலை மாறும். வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்குப் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களை அலைக்கழித்த நிலை மாறும். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். இந்த ராகு-கேது பெயர்ச்சி வாழ்வின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதாக அமையும்.

கும்பம்: மலர்ந்த முகத்துடன் வந்தாரை உபசரிக்கும் பண்பாளர்களே!

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்துகொண்டு வாழ்வில் புதிய திருப்பங்களையும், மன தைரியத்தையும் கொடுத்து வந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் வந்து அமர்கிறார். வருமானம் ஒருபக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் செலவுகளும் இருக்கத்தான் செய்யும். தடைப்பட்டு பாதியிலேயே நின்றுபோன காரியங்கள் இப்போது கைகூடும். குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகமாகும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப்போவது நல்லது. பிள்ளைகளிடம் இருந்த பிரச்னைகள் நீங்கும்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்துகொண்டு வீண் செலவுகளைத் தந்துகொண்டிருந்த கேது பகவான் இப்போது எட்டில் அமர்வதால் வெளிவட்டாரத்தில் நிதானத் தையும் பொறுமையையும் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் முன்புபோல் நஷ்டம் வராமல் இருக்க, மாற்றுவழியில் யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த மோதல் போக்கு மறையும். மேலதிகாரி உங்களின் பொறுப்புணர்வைக் கண்டு புதிய பதவி தருவார். இந்த ராகு-கேது மாற்றம் அசுர வளர்ச்சியையும், எங்கும் எதிலும் வெற்றியையும் தருவதாக அமையும்.

மீனம்: செயற்கரிய செயல்களைச் செய்தாலும் மிகச் சாதாரணமாக இருப்பவர்களே!

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் அமர்ந்துகொண்டு காரியத் தடைகளையும், மன உளைச்சலையும் கொடுத்து வந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்த உங்கள் பேச்சில் இனி முதிர்ச்சி தெரியும். கணவருடன் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வந்து போகும். பிள்ளைகளின் வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும் என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவினங்கள் துரத்தும்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் உட்கார்ந்துகொண்டு மன உளைச்சல்களைக் கொடுத்து வந்த கேது இப்போது ராசிக்கு ஏழாவது வீட்டில் அடியெடுத்து வைப்பதால் உங்களின் தோற்றப்பொலிவைக் கூட்டுவதுடன், மன அமைதியையும் தருவார். வியாபாரத்தில் அதிக முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. இருப்பதை வைத்து லாபம் சம்பாதிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் தடைப்பட்ட உரிமைகளும் சலுகைகளும் கிடைக்கக் கொஞ்சம் போராட வேண்டியிருக்கும். இந்த ராகு-கேது மாற்றம் அடிப்படை வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாக அமையும்

வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

Cheers,
RM…
Raghavan alias Saravanan Muthu
08 Oct 2023 | Sun | 23:23:11 PM IST