சனி மகா பிரதோஷம்

** இன்று சனி மகா பிரதோஷம்! சனிபகவானால் வாழ்க்கையில் ரொம்பவும் கஷ்டப்படுபவர்கள் இன்று இதை மட்டும் கட்டாயம் செய்து விட வேண்டும்.

ஆனி மாத சனி பிரதோஷம் ஆனது இன்றைய தினம் வரவேற்கின்றது. 01-07-2023 ஆம் தேதி இந்த சனிப்பிரதோஷத்தோடு சேர்ந்து இன்னும் இரண்டு அதி அற்புதம் வாய்ந்த சிறப்புகளும் இந்த நாளில் உண்டு. ஆனி மாத பிரதோஷம் தேவர்களுக்கு உண்டான பிரதோஷம் என்று சொல்லப்பட்டுள்ளது.

தேவர்கள் நேரடியாக சிவபெருமானை வழிபாடு செய்யக்கூடிய காலம் இது. கூடவே இன்றைய தினம் சனிக்கிழமையுடன் சேர்ந்து, அனுஷம் நட்சத்திரமும் வந்திருக்கின்றது. இது சனி பகவானுக்கு உரிய நட்சத்திரம். இத்தனை அற்புத சக்திகளை கொண்ட இந்த நாளில் சிவபெருமானை எப்படி வழிபாடு செய்வது.

ஆனி மாத சனி மகா பிரதோஷ வழிபாடு

பொதுப்படையான பிரதோஷ விரதங்களை எப்படி மேற்கொள்வது என்பது பெரும்பாலும் நமக்கு தெரிந்த விஷயம்தான். அதை தவிர்த்து ஒரு சில விஷயங்களை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இன்றைய தினம் பிரதோஷ நேரத்தில் சிவபெருமானுக்கு உங்கள் கையால் வில்வ இலை மாலை, அல்லது திராட்சை மாலை அல்லது சங்கு பூவால் மாலை தொடுத்து போட்டால், செய்த பாவங்கள் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நந்தி தேவருக்கு சிறப்பான அபிஷேகங்கள் நடக்கும் அந்த அபிஷேகத்தின் கலந்து கொண்டு நந்தி தேவரை தரிசனம் செய்தால் கோடான கோடி புண்ணியம் கிடைக்கும்.

சனி பகவானால் வரும் பிரச்சினைகள் நீங்க செய்ய வேண்டிய வழிபாடு

குறிப்பாக இன்று அனுஷம் நட்சத்திரத்தோடு இந்த பிரதோஷ தினம் வந்திருப்பதால், அதிலும் சனிக்கிழமையோடு சேர்ந்த அனுஷம் நட்சத்திரமும் வந்திருப்பதால் இன்றைய தினம், பிரதோஷ நேரம் ஆன மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் சிவபெருமானை தரிசனம் செய்துவிட்டு, கூடவே அந்த சிவன் கோவிலில் இருக்கும் கால பைரவரையும் தரிசனம் செய்து வழிபாடு செய்து விட்டு, தவறாமல் சனி பகவானை வழிபாடு செய்யுங்கள். இந்த பிரதோஷ நேரத்தில் சனி பகவானுக்கு தனியாக 2 மண் அகல் விளக்குகளை ஏற்றி வைத்துவிட்டு கஷ்டங்கள் குறைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இன்றைய தினம் பிரதோஷ நேரத்தில் நீங்கள் சனிபகவானை வழிபாடு செய்தால் சனி பகவானால், சனி தோஷத்தால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் எல்லாம் படிப்படியாக குறையும். அந்த அளவுக்கு அற்புதம் வாய்ந்த நேரம் தான் இன்றைய பிரதோஷ தின நேரம். உங்களுக்கு ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனி, சனி திசை நடந்து கஷ்டப்படுபவர்களாக இருந்தால் நீங்கள் இன்றைய தினத்தை தவறவே விடக்கூடாது.

இன்றைய தினம் பிரதோஷ நேரத்தில் உங்கள் கைகளால் பத்து ரூபாயை அன்னதானம் செய்தால் அது ஆயிரம் ரூபாய் அன்னதானம் செய்வதற்கு சமம். இன்றைய தினம் உங்களால் முடிந்தவரை மாலை பிரதோஷ நேரத்தில் உங்கள் கைகளால் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் கொடுப்பது சிறப்பு. நம் எல்லோருக்குமே இந்த சனி மஹா பிரதோஷத்தின் சிறப்பு என்ன என்பது தெரியும்.

சில பேரால் வழிபாடுகளை முறையாக கோவிலுக்கு சென்று செய்ய முடியும். சில பேரால் கோவிலுக்கு செல்வதற்கு நேரம் இருக்காது. வேலையில் இருப்பார்கள். எது எப்படியாக இருந்தாலும் இன்றைய தினம் சிவபெருமானை ஒரு நொடிப்பொழுது நினைத்து ஓம் நமசிவாய இந்த மந்திரத்தை சொன்னாலே உங்கள் கர்மங்கள் கரைந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இன்று நமசிவாய நமசிவாய சொல்லிக் கொண்டே இருங்கள்.

வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டு இருந்தாலும், இறுதி காலத்தில் உங்களுக்கு மோட்சம் கிடைப்பது உறுதி. நம்பிக்கை உள்ளவர்கள் எளிமையான மேல் சொன்ன வழிபாடுகளை பின்பற்றி பலன் பெறலாம்.

ஓம் நமசிவாய!!!

🙏

Cheers,
RM…
Raghavan alias Saravanan Muthu
01 Jul 2023 | Sat | 08:38:48 AM IST