தை அமாவாசையின் சிறப்பு

சிவமயம்! சிவாயநம!!

மெய்யடியார்களே, தை அமாவாசையின் சிறப்பு என்ன? என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

வீட்டு வாசலில் கோலம் போடுவதும், பூஜை மற்றும் படையல் இடும்போது மணி அடிப்பதும் தெய்வத்துக்கு செய்யும் செயலாகும். இவைகளை செய்யும்போது தெய்வங்கள் மட்டுமே வீட்டுக்குள் வருவார்கள்.

வீட்டு வாசலில் கோலம் போடுதல், பூஜை மற்றும் படையல் இடும்போது மணி அடித்தல் போன்றவை செய்யும்போது பித்ரு தேவனும், பித்ருக்களும் இதர ஆவிகளும் வீட்டுக்குள் வர முடியாது.

ஆகவே பித்ரு வழிபாடு செய்யும்போது வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. மணி அடிக்கக்கூடாது. அப்படி செய்தால் மட்டுமே, பித்ரு தேவன் வீட்டுக்குள் வந்து நீங்கள் செய்யும் பித்ரு பூஜை மற்றும் படையல்களை ஏற்று உங்கள் மூதாதையரிடம் சேர்த்துவிடுவார்.

உத்தராயண கால ஆரம்ப மாதமாக தை மாதம் வருவதால் தை அமாவாசையும், தட்சணாயன கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதால் ஆடி மாதத்தில் வரும் அமாவாசையும் பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை மற்றும் மஹாளய பட்சம் பதினைந்து நாட்கள் ஆக மொத்தம் பதினெட்டு நாட்கள் மட்டுமே பித்ரு லோகத்தில் உள்ள பித்ருக்கள் பித்ருலோகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி உண்டு. இந்த பதினெட்டு நாட்கள் மட்டும் உங்கள் மூதாதையர் உங்களை தேடி வீட்டுக்கு வருவார்கள். நீங்கள் செய்யும் பித்ரு பூஜை மற்றும் படையல்களை உங்கள் மூதாதையர் நேரடியாக பெற்றுக் கொள்வார்கள்.

உங்களை பெற்றவர்கள் உங்களிடம் ஆசாரம் எதிர்பார்ப்பது இல்லை. அவர்கள் எதையும் பெற்றுக்கொள்ள தயாராக இருந்தாலும், ஆசாரம் இல்லாததை பெற்றுக்கொள்ள தடை இருப்பதால் அவர்களால் நீங்கள் தரும் ஆசாரம் இல்லாத பூஜை மற்றும் படையல்களை பெற்றுக்கொள்ளமுடியாது; பித்ரு தேவனாலும் பெற்றுக்கொள்ளமுடியாது.

இந்த பதினெட்டு நாட்கள் தவிர மற்ற நாட்களில் பித்ருலோகத்தை விட்டு வெளியே செல்ல பித்ருக்களுக்கு அனுமதி இல்லாததால், பித்ரு தேவனே உங்கள் வீட்டு வந்து நீங்கள் செய்யும் பித்ரு பூஜை மற்றும் படையல்களை ஏற்று உங்கள் மூதாதையரிடம் சேர்த்துவிடுவார்.

பித்ரு பூஜையின்போது விரதமிருந்து முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும். இல்லத்தில் தடைபட்ட சுபகாரியங்கள் நடைபெறும். நீண்டநாளாக வருத்தி வந்த நோய் அகலும். மனக்கலக்கம் விலகும், மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தில் துர் சம்பவங்கள் நடக்காமல் காக்கும். பிள்ளைகளின் வாழ்க்கை கலங்காதிருக்கும். மென்மேலும் சிறக்கும். பித்ரு கடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும்.

பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாகிவிட்டால் தெய்வத்தால்கூடக் கருணை காட்ட முடியாது. உதவி செய்ய முடியாது என்கிறது கருட புராணம்.

எல்லா பித்ரு பூஜை சமயத்திலும் இதை செய்ய முடியாவிட்டாலும், அவர்கள் இறந்த திதி, தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை ஆகிய நான்கு நாட்கள் மட்டுமாவது விரதமிருந்து முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நல்லது.

பித்ரு பூஜை தர்ப்பணம் திலதர்பணபுரி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், முக்கடல் கூடும் கன்னியாகுமரி மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி போன்ற கோவில்களிலோ, நீர் நிலை உள்ள பகுதிகளிலோ செய்யலாம்; வீட்டிலும் செய்யலாம்.

31 - 1 - 2022 தை மாதம் 18ம் நாள் திங்கள்கிழமை தை அமாவாசை வருகிறது.

தை அமாவாசையில் அதிகாலை எழுந்து நீராடி விட்டு, சிவாலய தரிசனம் செய்ய வேண்டும். பின்னர் முன்னோர்களுக்கு தர்ப்பணம், அன்னதானம் செய்தால் மிகவும் நன்மை அளிக்கும். அமாவாசை நாளில் தீர்த்தக் கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகனாகிய சூரியனுக்கு மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் அவருடைய அருளையும் பெறலாம்.

எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அமாவாசையன்று செய்தால் அதற்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். ராகு-கேது பரிகாரம், சர்ப்பதோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்னைகள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இந்த மாதிரியானவற்றிற்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது.

திருச்சிற்றம்பலம்.

இப்படிக்கு சிவனடிசீரே பரவுவார் சிவ.இரா.சுப்பிரமணி.
அண்ணாமலையார் கல்வியியல் மற்றும் அறக்கட்டளை ஒசூர்.

Cheers,
RM…
Raghavan alias Saravanan Muthu
31 Jan 2022 | Mon | 10:52:03 AM IST